குருசடை தீவுக்கு என்னாச்சு?


குருசடை தீவுக்கு என்னாச்சு?
x
தினத்தந்தி 18 Aug 2020 4:00 AM IST (Updated: 18 Aug 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள குந்துகால் பகுதியிலிருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதி வரை 21 தீவுகள் இயற்கையாகவே அமைந்துள்ளன.

ராமேசுவரம், 

இந்த 21 தீவுகளை சுற்றிலும் டால்பின், ஆமை, கடல் பசு, பவளப்பாறைகள், கடல் குதிரை உள்ளிட்ட 3600-க்கும் அதிகமான அரிய கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இதில் சிங்கிலி தீவு, குருசடை தீவு, முயல்தீவு, மனோலி, பூமரிச்சான் உள்ளிட்ட 7 தீவுகள் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டில் வருகின்றன.

பாம்பன் குந்துகால் அருகே உள்ள தென்கடலான மன்னார் வளைகுடா கடலின் தன்மையானது கடந்த 6 மாதமாகவே மாற்றமடைந்து காணப்படுகிறது. அதாவது, கடல் அலை வேகமாக இருப்பதுடன், கடல் நீரோட்டமும் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்குள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதி இடிந்து கடலுக்குள் மெல்ல மெல்ல செல்கிறது. இதேபோல் குந்துகால் அருகே குருசடை தீவின் சுற்றளவு பரப்பும் கடல் அரிப்பால் குறைந்து வருவதாக தெரியவருகிறது.

இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம் வருமாறு:-

குருசடை தீவின் சுற்றளவு கடல் அரிப்பினால் குறைந்து வருகிறது. இதனால் தீவை சுற்றிலும் உள்ள கரையை ஒட்டிய பகுதியில் 2 மீட்டர் வரையிலும் கடல் நீர் உயர்ந்து, மணல் பரப்பை மூழ்கடித்துள்ளது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் குருசடை தீவின் பல பகுதிகள் கடலுக்குள் சென்றுவிடும். இயற்கையாகவே ஏற்பட்டுள்ள இந்த கடல் நீரோட்டத்தின் வேகத்தை தடுத்து நிறுத்த நம்மால் ஏதும் செய்ய முடியாது.

தீவுப்பகுதி தேசிய கடல்சார் பூங்காவாக உள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த கடல் பகுதியானது பெரிய கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் செல்லும் கடல் வழிப்பாதையாக உள்ளது. அதனால் அங்கு எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி பேட்ரிக் கூறியதாவது:-

இத்தனை ஆண்டு காலமாக கடல் அலையின் வேகத்தால் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதிக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்தது கிடையாது.

குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்ட பின்புதான் கடல் அலையின் வேகம் அதிகரித்து, அங்கு கடல் அரிப்பு அதிகமாகி உள்ளது. அதுபோல் குருசடை தீவின் பரப்பளவும் குறைந்தது போல் காணப்படுகிறது.

குந்துகால் மற்றும் குருசடை தீவுக்கு இடைப்பட்ட கப்பல் செல்லக்கூடிய கால்வாய் பகுதியானது ஆழம் குறைந்து தூர்ந்து போய்விட்டது.

இந்த கால்வாய் பகுதியை தோண்டி ஆழப்படுத்தினால் இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

இதை அப்படியே விட்டால் இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீவின் பெரும் பகுதி கடலுக்குள் மூழ்கி விடவும் வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ஆழப்படுத்த தூர்வாரும் பணியை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story