செய்யாறு தாலுகாவில் உள்ள அத்திமலையில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
செய்யாறு தாலுகாவில் உள்ள அத்திமலையில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொலைப்பேசி மூலமாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனர்.
செய்யாறு தாலுகா இளநீர்க்குன்றம் பகுதி அத்திமலை கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் மலை ஒன்று உள்ளது. அதை, அத்திமலை என அழைப்பர். இந்த மலை இயற்கை அரணாக எங்களுக்கு விளங்குகிறது. செய்யாற்றில் வெள்ளம் வந்தால், இந்த மலை தடுப்பு அரணாக எங்களை பாதுகாக்கிறது. இந்த மலையில் தற்போது கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த மலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த கன்னியம்மன், மத்தியம்மன் கோவில்கள் உள்ளன. மலையடிவாரத்தில் வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டுமனை பட்டா வழங்கினார். கல்குவாரி அமைக்கப்பட்டால் நாங்கள் பாதிப்படைவோம். இந்த மலையில் இருந்து மழைநீர் அங்குள்ள ஏரிக்குச் செல்லும்.
அந்தப் பகுதியில் ஏற்கனவே ஒரு கல்குவாரி அமைக்கப்பட்டதால் ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. எங்களது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாகக் கல்குவாரி அமைத்தால் நீர்ஆதாரம் இல்லாமல் போய்விடும். எங்கள் ஊர்மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அத்திமலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடந்தவாடி பகுதி காட்டுவனத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரநாதன் என்ற முதியவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
40 ஆண்டுகளுக்கு மேலாக நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். முன்விரோதம் காரணமாக சிலர் எனது நிலத்தில் நீர்வழி கால்வாய் உள்ளதாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அதிகாரிகள் நான் குடியிருக்கும் வீட்டை அகற்ற முயன்றனர். இதையடுத்து எனது தரப்பில் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், அனைத்து ஆவணங்களையும் நீதிபதி பரிசீலனை செய்து நீர்வழி கால்வாய் இல்லை என்றும், அதிகாரிகள் கள ஆய்வு அறிக்கையில் தவறான தகவல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிகாரிகள் அதை மீறி எனது வீட்டை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் 245 பேர் பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பிற மாவட்டங்களில் வழங்கப்படுவதை விட குறைந்தளவு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே 2020-2021ம் ஆண்டுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
கொரோனா காலத்திலும் நாங்கள் முழுமனதாகப் பணி செய்து வருகிறோம். பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், நாங்கள் தொடர்ந்து பணி செய்து வருகிறோம். விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் குறைந்த ஊதியத்தால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. எனவே ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள நாயுடுமங்கலம் பகுதி முனியப்பன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த உத்திரமேரி என்ற மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் கந்தசாமியை அவர் நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உண்டு. இரு மகன்களும் மாற்றுத்திறனாளிகள். மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறோம். நானும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் தங்கியிருக்கும் குடிசையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்கின்றனர். கேள்வி கேட்டால் குடிசையை கொளுத்தி விடுவதாக மிரட்டுகின்றனர். பல ஆண்டுகளாக நாங்கள் அங்கு தான் வாழ்ந்து வருகிறோம். எனவே எங்கள் இடத்தை மீட்டு தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
Related Tags :
Next Story