சதுர்த்தி விழாவையொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட கூடாது - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு


சதுர்த்தி விழாவையொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட கூடாது - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு
x
தினத்தந்தி 18 Aug 2020 10:55 AM IST (Updated: 18 Aug 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கூடாது என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதோ, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ கூடாது.

ஆகவே விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.

மேலும் விழா கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. அந்த கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், கோவில் நிர்வாகத்தினரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் கள் பிரவின்குமார், விசுமகாஜன் மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story