ஊட்டியில், விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் மீது குற்றச்சாட்டு கூறி உறவினர்கள் போராட்டம்
ஊட்டியில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மீது குற்றச்சாட்டு கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கெந்தொரை தோட்ட மலை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 38), விவசாயி. அவரது நண்பர் செந்தில்குமார். இருவரும் கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தொட்டபெட்டா வழியாக கெந்தொரைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனாடுகம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சீனிவாசனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மது அருந்தி ஓட்டி வந்தது தெரியவந்தது. நவீன கருவி மூலம் பரிசோதிக்கப் பட்டதில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மது அருந்தி வாகனம் ஓட்டியதாக சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த மோட்டார் சைக்கிள் சக்திவேல் என்பவருக்கு சொந்தமானது. அபராதம் செலுத்தி மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லும்படி கூறினர். இதையடுத்து சீனிவாசன் வீடு திரும்பினார். பின்னர் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் வீடு அருகே உள்ள தைல பொருட்கள் வைக்கும் குடோனில் சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தேனாடுகம்பை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு திரண்டனர். பின்னர், போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் சீனிவாசனின் உடலை வாங்க சம்மதித்தனர். பின்னர் அவருடைய உடல் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.
Related Tags :
Next Story