ஆண்டிப்பட்டி அருகே, கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ்காரர் சரக்கு ஆட்டோ மோதி பலி - பிறந்த குழந்தையை பார்க்க சென்றபோது பரிதாபம்


ஆண்டிப்பட்டி அருகே, கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ்காரர் சரக்கு ஆட்டோ மோதி பலி - பிறந்த குழந்தையை பார்க்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 18 Aug 2020 11:26 AM IST (Updated: 18 Aug 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கொரோனாவில் இருந்து மீண்ட போலீஸ்காரர் சரக்கு ஆட்டோ மோதி பலியானார்.

ஆண்டிப்பட்டி, 

தேனி அருகே முத்துதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் தேனி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான அவரது மனைவிக்கு வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் தாயும், சேயும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிறந்த குழந்தையை பார்க்க தேனியில் இருந்து முருகன் மற்றும் அவரது மாமனார் சின்னத்துரை ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்றனர். தேனியை அடுத்துள்ள குன்னூர் அருகே வந்தபோது முருகன் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து சாலையில் செல்போனை இருவரும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது போடியிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக முருகன் மற்றும் சின்னத்துரை மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் முருகன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story