கூட்டுறவு சங்கம் அமைக்க வலியுறுத்தி சாலையில் பாலை கொட்டி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர் அருகே கூட்டுறவு சங்கம் அமைக்க வலியுறுத்தி பாலை சாலையில் ஊற்றி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள அய்யர்மடம் பகுதியில் பா.ம.க. வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரண்டனர். பின்னர் விவசாயிகள் கேனில் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வேடசந்தூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அய்யர்மடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.29 வரை விலை கொடுத்து தனியார் பால் பண்ணை உரிமையாளர்கள் வாங்கினர். ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.18-க்கு வரையே விலை கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அய்யர்மடத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (ஆவின்) அமைக்க வேண்டும் என்றனர்.
பின்னர் பேசிய போலீசார், அனுமதியின்றி இதுபோன்று போராட்டங்களில் ஈடுபட கூடாது. கூட்டுறவு சங்கம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். போராட்டத்தில், பா.ம.க. ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் செல்லத்துரை, துணை செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story