திருப்போரூர் அருகே வாலிபருக்கு வெட்டு; ஒருவர் கைது


திருப்போரூர் அருகே வாலிபருக்கு வெட்டு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2020 9:45 PM GMT (Updated: 18 Aug 2020 6:10 PM GMT)

திருப்போரூர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பம்-கூடுவாஞ்சேரி சாலை காட்டூர் கிராமம் அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 28). கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவரது மனைவி 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அதே பகுதியை சேர்ந்தவர் மகி என்ற மகேந்திரன். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் தான் பணியாற்றும் இடத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கண்ணகி நகர் பகுதியில் குடியேறியுள்ளார். மகேந்திரனின் முதல் மனைவி மாலா இரு குழந்தைகளுடன் காட்டூர் கிராமத்தில் வசித்து வருகிறார். மகேந்திரனின் உறவினரான முனுசாமியின் வீடு மாலாவின் வீட்டுக்கு எதிரே உள்ளது. இந்த நிலையில் மாலாவுக்கும் முனுசாமிக் கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வசித்து வந்த மகேந்திரனின் உறவினர் இறந்து விட்டார். அதற்காக மகேந்திரன் பாண்டூர் கிராமத்துக்கு சென்றார். அப்போது அவரது முதல் மனைவி மாலாவுக்கும் முனுசாமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை மகேந்திரன் தெரிந்து கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் தனது நண்பர்களான வியாசர்பாடியை சேர்ந்த மேகநாதன் மற்றும் ஒருவருடன் சேர்ந்து முனுசாமியை கொல்ல திட்டமிட்டார். முனுசாமியை மது குடிக்க அழைத்தனர். நெல்லிக்குப்பம்- கூடுவாஞ்சேரி சாலையில் அமைந்துள்ள மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு அஸ்தினாபுரம் மயான பகுதியான ஆலமரத்தடிக்கு சென்று மது குடித்தனர்.

அப்போது மகேக்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனுசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். இதில் முனுசாமிக்கு தலை, கை, உடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 28 வெட்டு காயங் கள் ஏற்பட்டது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முனுசாமியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி மகேந்திரனின் நண்பர் மேகநாதனை கைது செய்தனர். மகேந்திரன் மற்றும் அவரது நண்பர் என இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story