நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்


நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 Aug 2020 4:15 AM IST (Updated: 19 Aug 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழா கொண்டாடுவதையோ, விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்வதோ, அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.

எனவே விநாயகர் சதூர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

சிறிய கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அந்த கோவில்களில் வழிபாடு செய்யும்போது, அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில வக்கீல் அணி செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் சுடலை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story