ரவுடி துரைமுத்து என்கவுண்ட்டர் செய்யப்படவில்லை தென்மண்டல ஐ.ஜி. முருகன் பேட்டி


ரவுடி துரைமுத்து என்கவுண்ட்டர் செய்யப்படவில்லை தென்மண்டல ஐ.ஜி. முருகன் பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2020 4:45 AM IST (Updated: 19 Aug 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி துரைமுத்து என்கவுண்ட்டர் செய்யப்படவில்லை என்று தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாட்டை அடுத்த மணக்கரை மலையடிவார பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்க சென்ற தனிப்படை போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில், போலீஸ்காரர் சுப்பிரமணியன் தலைசிதறி உயிரிழந்தார். மேலும் மற்றொரு வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் பலியானார்.

இறந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன், ரவுடி துரைமுத்து ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் நேற்று மாலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உடலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரவுடி துரைமுத்து மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை கண்டவுடன் துரைமுத்து தப்பிச் செல்ல முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது துரைமுத்து திடீரென்று போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார். ஆனால் அந்த குண்டு வெடிக்கவில்லை.

உடனே துரைமுத்து மற்றொரு நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசினார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் சுப்பிரமணியன் மீது அந்த வெடிகுண்டு விழுந்து வெடித்ததில், அவர் உயிரிழந்தார். வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் பலத்த காயம் அடைந்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

போலீசார் போதிய முன்னெச்சரிக்கையுடன் துப்பாக்கியுடன்தான் துரைமுத்துவை பிடிக்க சென்றனர். அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது, துப்பாக்கிச்சூடு நடத்தினால், அவரது அருகில் உள்ள போலீசார் மீதும் குண்டு பாயும் அபாயம் இருந்ததால், துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. துரைமுத்து என்கவுண்ட்டர் செய்யப்படவில்லை. போலீசார் தகுந்த பாதுகாப்புடன் அவரை பிடிக்க செல்லவில்லை என்று கூற முடியாது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கிடந்த ஒரு வெடிகுண்டு, 2 அரிவாள்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளோம். இந்த சம்பவத்தில் வேட்டை தடுப்பு காவலர் சுடலைக்கண்ணு, துரைமுத்துவின் தம்பி சாமிநாதன், உறவினரான சிவராமலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயக்குமார் (தூத்துக்குடி), மணிவண்ணன் (நெல்லை), நெல்லை துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story