வேதாரண்யம் அருகே கூரையை பிரித்து வீட்டுக்குள் இறங்கி மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை-பணம் கொள்ளை - குரைத்த நாயை விஷம் வைத்து கொன்றனர்


வேதாரண்யம் அருகே கூரையை பிரித்து வீட்டுக்குள் இறங்கி மூதாட்டியை தாக்கி 6½ பவுன் நகை-பணம் கொள்ளை - குரைத்த நாயை விஷம் வைத்து கொன்றனர்
x
தினத்தந்தி 19 Aug 2020 4:30 AM IST (Updated: 19 Aug 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கூரையை பிரித்து வீட்டுக்குள் இறங்கிய மர்ம மனிதர்கள் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 6½ பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அப்போது நாய் குரைத்ததால் நாயை விஷம் வைத்து கொன்றனர்.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட செண்பகராயநல்லூர் மேலக்காடு பகுதியை சேர்்ந்தவர் கல்யாணி(வயது 80). இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். கல்யாணியின் கணவர் முருகேசன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

கணவர் இறந்து விட்டதையடுத்து கல்யாணி செண்பகராயநல்லூர் மேலக்காடு பகுதியில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் தனது காவலுக்காக வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வந்தார். கல்யாணி வீட்டில் தனியாக வசித்து வந்ததால் அவரை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், அவரது வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் கல்யாணியின் கூரை வீட்டின் அருகே வந்த மர்ம மனிதர்கள், அவரது வீட்டின் கூரையை பிரித்து உள்ளே இறங்க முயன்றனர். ஆனால் வீட்டு வாசலில் இருந்த நாய் மர்ம மனிதர்களை கண்டதும் குரைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதலில் நாயை கொன்று விட்டு தங்களது கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தனர்.

அதன்படி விஷம் கலந்த உணவை அவர்கள் நாய் முன்பு வீசினர். இந்த உணவை உட்கொண்ட நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தது. நாய் இறந்ததை உறுதிபடுத்திக்கொண்ட மர்ம மனிதர்கள் பின்னர் கல்யாணியின் வீட்டின் கூரை மீது ஏறி கூரையை பிரித்து ஒருவர் பின் ஒருவராக உள்ளே இறங்கினர்.

பின்னர் அவர்கள் வீட்டுக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கல்யாணியின் வாய் மற்றும் கண்களை தங்களது கைகளால் இறுக மூடினர். திடீரென யாரோ சிலர் தனது கண்களையும், வாயையும் அழுத்தி மூடுவதை உணர்ந்த கல்யாணி அவர்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் கல்யாணியை தாக்கி அவர் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்தனர். பின்னர் அவர்கள், பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த டி.வி. ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

நேற்று காலை இந்த கொள்ளை சம்பவம் குறித்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கல்யாணி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நாகையில் இருந்து விரல் ரேகை நிபுணர்கள் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

நள்ளிரவில் நாய்க்கு விஷம் வைத்து கொன்று கூரையை பிரித்து வீட்டுக்குள் இறங்கிய மர்ம மனிதர்கள் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story