திருவையாறு அருகே, மூதாட்டி வீடு புகுந்து நகை-பணத்தை அரிசி பையுடன் தூக்கிச்சென்ற குரங்குகள்
திருவையாறு அருகே மூதாட்டி வீடு புகுந்து 1 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை அரிசி பையுடன் குரங்குகள் தூக்கிச்சென்றன. இதனால் அந்த மூதாட்டி தவித்து வருகிறார்.
திருவையாறு,
தஞ்சையை அடுத்த திருவையாறு பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதுடன், வீட்டின் மேல் ஏறி கூரைகளை பிய்த்து சேதப்படுத்தி விடுகிறது. குரங்குகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள், குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து நகை-பணத்தை குரங்குகள் எடுத்து சென்று விட்டன. இதுகுறித்த விவரம் வருமாறு:-
திருவையாறு அருகே வீரமாங்குடி குதிரைகோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி சாரதாம்பாள்(வயது 70). இவர் மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி வேலையை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று தனது துணிமணிகளை துவைப்பதற்காக குடிசை வீட்டின் தட்டி கதவை சாத்தி விட்டு, எதிரே உள்ள குழாயடிக்கு சென்றார். அந்த நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் அந்த பகுதிக்கு வந்தன. சாரதாம்பாளின் வீட்டு தட்டி கதவு லேசாக திறந்து கிடந்ததால் கதவை தள்ளிக்கொண்டு குரங்குகள் வீட்டிற்குள் புகுந்தன.
வீட்டிற்குள் இருந்த வாளியை திறந்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் தூக்கி வீசிக்கொண்டு இருந்தன. துணி துவைத்து கொண்டிருந்த சாரதாம்பாள், வீட்டின் கதவு திறந்து கிடப்பதையும், வீட்டிற்குள் குரங்குகள் சத்தம் வருவதையும் கேட்டவுடன் துணி துவைத்ததை அப்படியே போட்டு விட்டு சத்தம் போட்டபடியே வீட்டை நோக்கி வந்தார்.
அப்போது வாளிக்குள் பச்சரிசி வைக்கப்பட்டிருந்த துணிப்பையை அலாக்காக தூக்கிக்கொண்டு வெளியே வந்த குரங்குகள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் மாடிக்கு சென்றன. அங்கு வைத்து துணிப்பையை பிரித்து அதற்குள் இருந்த பச்சரிசியை அள்ளி சாப்பிட்டு கொண்டிருந்தன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குரங்குகளை விரட்டியதால் பச்சரிசி இருந்த பையுடன் குரங்குகள் அங்கிருந்து ஓடி விட்டன.
கூலி வேலைக்கு சென்று சிறுக, சிறுக சேர்த்து வைத்து வாங்கிய ½ பவுன் மோதிரம், ½ பவுன் தோடு மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த அரிசி பைக்குள் சாரதாம்பாள் வைத்து இருந்தார். நகை-பணம் இருந்த பையை குரங்குகள் தூக்கி சென்று விட்டதால் சாரதாம்பாள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்.
வீட்டிற்குள் குரங்குகள் புகுந்து செய்த அட்டகாசம் குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், பாபநாசம் தாசில்தாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.
இது குறித்து சாரதாம்பாள் கூறும்போது, கூலிவேலைக்கு செல்லும் பணத்தை கொண்டு நான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். அன்றாட செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை சிறுக, சிறுக சேர்த்து வைத்து நகை வாங்கினேன். அதை பச்சரிசிக்குள் மறைத்து வைத்து இருந்தேன். பச்சரிசி இருந்த பையை வாளிக்குள் வைத்து மூடியதுடன் யாரும் எடுத்து விடக்கூடாது என முட்களையும் போட்டு வைத்திருந்தேன். அதை தள்ளி போட்டுவிட்டு பச்சரிசி இருந்த பையை குரங்குகள் தூக்கி சென்று விட்டன. தள்ளாத வயதில் உழைத்து சேர்த்ததை குரங்குகள் தூக்கி சென்று விட்டதே என்று கண்ணீர் மல்க கூறினார்.
Related Tags :
Next Story