கஞ்சா கடத்தல் லாரியை கடத்திச்சென்ற 6 போலி போலீசார் - சினிமாவை மிஞ்சும் சம்பவம்


கஞ்சா கடத்தல் லாரியை கடத்திச்சென்ற 6 போலி போலீசார் - சினிமாவை மிஞ்சும் சம்பவம்
x
தினத்தந்தி 19 Aug 2020 5:56 AM IST (Updated: 19 Aug 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா கடத்தி வந்த மினி லாரியை கடத்திச் சென்ற 6 போலி போலீசாரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த திகில் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மும்பை போரிவிலி கிழக்கு சஞ்சய் காந்தி தேசியபூங்கா அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6 பேர் கொண்ட கும்பல் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் தங்களை போலீசார் என கூறிக்கொண்டனர். லாரியில் சோதனை போட வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது உடன் இருந்த 2 பேர் டிரைவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு, அவரை லாரியுடன் கடத்தி சென்றனர். லாரி அங்குள்ள காட்டுப்பகுதி அருகே சென்றபோது டிரைவரை அந்த கும்பல் வெளியே தள்ளிவிட்டு லாரியுடன் தப்பிச்சென்றது.

இதனால் பாதிக்கப்பட்ட டிரைவர் அங்குள்ள போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். லாரியில் தான் கஞ்சா கடத்தி வந்ததாகவும், மர்ம கும்பல் போலீசார் போல நடித்து தன்னிடம் கைவரிசை காட்டியதாகவும் திகில் தகவலை தெரிவித்தார். கேட்பதற்கு சினிமா கதையை மிஞ்சுவதாக இருந்ததால், போலீசாரும் திகைப்பில் ஆழ்ந்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிரைவரிடம் இருந்து அக்கும்பல் பறித்து சென்ற செல்போன் எண் அலைவரிசையை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், அந்த கும்பலினர் பதுங்கி இருந்த இடம் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 6 பேர் கும்பலையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் கஞ்சாவுடன் கடத்தி சென்ற லாரியை மீட்க போலீசார் கைதான 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பற்றியும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Next Story