புதுவையில் பரபரப்பு: கொரோனாவால் உயிரிழந்தவருக்கு பதில் உடலை மாற்றி கொடுத்ததால் குழப்பம் உறவினர்கள் அதிர்ச்சி; மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதம்


புதுவையில் பரபரப்பு: கொரோனாவால் உயிரிழந்தவருக்கு பதில் உடலை மாற்றி கொடுத்ததால் குழப்பம் உறவினர்கள் அதிர்ச்சி; மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 19 Aug 2020 1:12 AM GMT (Updated: 19 Aug 2020 1:12 AM GMT)

கொரோனாவால் உயிரிழந்தவருக்கு பதில் வேறு பெண்ணின் உடலை மாற்றிக் கொடுத்த குழப்பத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுவையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

புதுச்சேரி,

புதுவை வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி (வயது 44). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு குணவேலியை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்தன. பரிசோதனை முடிவுகள் வரும் வரை குணவேலியின் உடல் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைத்தது. இதில் குண வேலிக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குணவேலியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களிடம் உடலை தருவதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் செய்தனர்.

இதற்காக பிணக்கிடங்குக்கு சென்று அங்கிருந்த பெண்களின் உடல்களை பார்த்தபோது குணவேலியின் உடல் இல்லாதது தெரியவந்தது. இதனால் குணவேலியின் உடல் எது? என்பது குறித்து அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர். அவர்களும் அங்கு வந்து பார்த்த போது குணவேலியின் உடல் காணாதது தெரியவந்தது. பிணவறையில் இருந்த குணவேலியின் உடலை காணாமல் அவரது உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த வேறு ஒரு பெண்ணின் பிணத்துக்குப் பதிலாக குணவேலியின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் பிளாஸ்டிக் பையில் சுற்றி மாற்றி கொடுத்தது தெரியவந்தது. பொதுவாக கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பது இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியில் தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் பையில் உடலை சுற்றி எடுத்துச் சென்று அரசு செலவிலேயே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல் தொற்று பாதித்து உயிரிழந்தவரின் உடலுக்குப் பதிலாக குணவேலியின் உடலை மாற்றி கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து குணவேலியின் உறவினர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து துணை கலெக்டர் சுதாகர், போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்தனர். அப்போது தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதனின் மனைவி ஆனந்தாயி என்கிற சரோஜா(வயது 76) என்பவரை கொரோனா பாதித்த நிலையில் கடந்த 6-ந் தேதி சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து கடந்த 13-ந் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் திடீரென கடந்த 15-ந் தேதி இறந்து விட்டார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆனந்தாயியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து வந்து சவக்கிடங்கில் வைத்தனர். அவரது இறுதிச்சடங்குக்கு நடவடிக்கை எடுத்த நிலையில் அப்போது ஆனந்தாயியின் உடலுக்கு பதிலாக குணவேலியின் உடலை அவரது உறவினர்கள் மாற்றி அடையாளம் காட்டி இருப்பது தற்போது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் குணவேலியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் நடந்த இந்த குழப்பம் குறித்து தெரிவித்து குணவேலியின் உறவினர்களிடம் அதிகாரிகள் சமரசம் பேசினர். இருந்தாலும் அவர்கள் மிகுந்த வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போன பெண்ணின் உடல் கொரோனா தொற்று காரணமாக மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம் கதிர்காமம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story