பெரம்பலூரில் வெவ்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் வெவ்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2020 4:00 AM IST (Updated: 19 Aug 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் வெவ்வேறு இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சி.ஐ.டி.யு. ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்திற்காக குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் எப்.சி. காப்பீடு, பர்மிட் முடிவடைந்த நாளில் இருந்து ஒரு ஆண்டு காலத்திற்கு நீட்டிப்பு செய்திட வேண்டும். 

வாகனத்தை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தலை கைவிட அரசு ஆணை வெளியிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் திரளான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரியும், அரசு பொதுத்துறைகளை பாதுகாத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொ.மு.சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, பணியாளர் சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்கும் திருத்த விதி 288-ஏ அறிவிக்கையை கைவிட வேண்டும். அரசு பஸ்களை இயக்கி தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் கடைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட துணை செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில வாணிபக்கழக பணியாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணராஜ் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story