சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 திருநங்கைகள் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி


சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 திருநங்கைகள் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 19 Aug 2020 3:45 AM IST (Updated: 19 Aug 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 திருநங்கைகள் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வரும் திருநங்கைகள் நிரஞ்சனா (வயது 24), பிரகதி (23), ரம்யா (33). இவர்கள் 3 பேரிடம், வேறு சில திருநங்கைகள் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 திருநங்கைகளும் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த போலீசார் திருநங்கைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனுகொடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் திடீரென்று 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதைபார்த்த போலீசார் அவர்களிடம் இருந்த மாத்திரைகளை பிடுங்கினர். எனினும் அவர்கள் லேசாக மயக்கம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன் ஆகியோர் அரைமயக்கத்தில் இருந்த திருநங்கைகளிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மற்ற திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கைகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில திருநங்கைகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றோம். ஆனால் எங்களை போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் டாக்டர்கள் எங்களை டிஸ்சார்ஜ் செய்து விட்டோம், எனவே வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினார்கள். எங்கள் புகார் குறித்து இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்குள் எங்களை ஏன் வீட்டுக்கு போகச்சொல்கிறீர்கள் என்று கூறினோம். அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டபோது அங்கும் சரியான பதில் இல்லை.

எனவே எங்களை மிரட்டும் சில திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஏற்கனவே தூக்க மாத்திரைகளை தின்று விட்டுத்தான் வந்தோம். மீதி உள்ள மாத்திரைகளை சாப்பிடும் போது போலீசார் பறித்துக்கொண்டனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருநங்கைகள் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story