ரூ.4.63 கோடி மோசடி வழக்கு: திருச்சி அறம் மக்கள் நலச்சங்க நிர்வாகி கைது
ரூ.4 கோடியே 63 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் திருச்சி அறம் மக்கள் நலச்சங்க நிர்வாகியும், தொழில் அதிபருமான அழகர்சாமி என்ற ராஜா கைது செய்யப்பட்டார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 55). இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சிவகாசியில் பட்டாசுக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் பட்டாசு வியாபாரம் செய்யும் அசோக் என்பவர் மூலம் திருச்சி தொழில் அதிபர் அழகர்சாமி என்ற ராஜா அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் சென்னை, திருச்சியில் கம்பெனி நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் கோவை, திருச்சி, சென்னையில் பட்டாசு விற்பனை செய்ய தனது கம்பெனி பெயரில் 1,000 ரூபாய் பெருமானமுள்ள ஒரு லட்சம் பட்டாசு பெட்டிகள் (கிப்ட் பாக்ஸ்) தயார் செய்து கொடுக்குமாறு கேட்டார். அதன்பேரில் பல தவணைகளில் 13,850 பட்டாசு பெட்டிகள் தயார் செய்து கொடுத்தேன்.
மேலும் அழகர்சாமி தம்பி ரமேஷ்குமார் மற்றும் அவர்களது கம்பெனியின் மேலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு விளம்பர செலவு மற்றும் கடனாக ரூ. 1 கோடியே 30 லட்சம் பெற்றனர். ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை என்னிடமும், ரூ.1 கோடியே 91 லட்சத்து 36 ஆயிரத்து 840 ரூபாய் மதிப்பிலான பட்டாசு பெட்டிகளை நண்பர் அசோக்கிடமும் பெற்றனர்.
2015-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் நானும், அசோக்கும் சென்னையில் உள்ள அவர்களது கம்பெனிக்கு சென்று பணம் குறித்து கேட்ட போது சிறிது நாட்களில் தருவதாக கூறினார்கள். மேலும் அந்த பணத்திற்கு ரமேஷ்குமார் உறுதிமொழி கடிதமும் எழுதி கொடுத்தார். அதன்பின்னர் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
மேலும் எங்களிடம் மோசடி செய்த ரூ.4 கோடியே 63 லட்சத்து 36 ஆயிரத்து 840 ரூபாயை வேறு தொழிலில் முதலீடு செய்து ஏமாற்றி மோசடி செய்தும், கொலைமிரட்டலும் விடுத்தனர். எனவே அழகர்சாமி, அவரது தம்பி ரமேஷ்குமார், கம்பெனி மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் அழகர்சாமி, ரமேஷ்குமார், சுந்தர்ராஜன், சீனிவாசன், அருண், ஐஸ்வர்யா, வசந்த், அறிவுமணி, இளங்கோ உள்ளிட்ட சிலர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக ரமேஷ்குமார், சுந்தர்ராஜனை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். அப்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாக அழகர்சாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தெரிவித்தபடி பணத்தை தராமல் இருந்ததாகவும், அதனால் போலீசார் அழகர்சாமியை தேடி வந்ததாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் போலீசார் அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட ராஜா, மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் அதனை இரட்டிப்பாகி தருவதாக கூறப்படுகிறது. மேலும், இவர் அறம் மக்கள் நல சங்கம் என்ற ஒரு அமைப்பையும் நடத்தி வருகிறார். ராஜா அதன் தலைவராகவும், அவரது தம்பி ரமேஷ்குமார் பொதுச்செயலாளராகவும் உள்ளனர்.
ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் முருகனை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்து கொண்டார். கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி எல்பின் நிறுவனத்தில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியதாக இந்த நிறுவனம் மீது மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story