பெரம்பலூரில்,2 டாக்டர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது - அரியலூரில் மேலும் 2 பேர் பலி


பெரம்பலூரில்,2 டாக்டர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது - அரியலூரில் மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2020 4:00 AM IST (Updated: 19 Aug 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 2 டாக்டர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 975 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணம் அடைந்த 752 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 211 பேர் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் பகுதியில் 2 டாக்டர்கள் உள்பட 9 பேர், கிராமிய பகுதிகளான பாடாலூர், துங்கபுரம், மேலமாத்தூர், கடம்பூர், எறையூர், ரஞ்சன்குடி, விஜயகோபாலபுரம், இரூர், சிறுகன்பூர், பெருமத்தூர் குடிகாடு, அம்மாபாளையம், வாலிகண்டபுரம், திருமாந்துறை, நெற்குணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 பேர் என மொத்தம் 34 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,009-ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், செந்துறை மற்றும் தா.பழூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முறையே 10, 9 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 8 பேருக்கும் என மொத்தம் 73 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,941 ஆக உயர்ந்துள்ளது.

Next Story