திருவண்ணாமலையில், பல்வேறு கடைகளில் திருடிய கொள்ளையன் கைது - ரூ.6 லட்சம், மோட்டார்சைக்கிள் பறிமுதல்


திருவண்ணாமலையில், பல்வேறு கடைகளில் திருடிய கொள்ளையன் கைது - ரூ.6 லட்சம், மோட்டார்சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2020 3:45 AM IST (Updated: 19 Aug 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பல்வேறு கடைகளில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகரில் திண்டிவனம் ரோடு ரெயில்வே கேட் அருகில் உள்ள பர்னிச்சர் கடை, வேலூர் சாலையில் உள்ள ஒரு ஆட்டோ ஏஜென்சி, மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையம், காஞ்சி சாலையில் உள்ள மோட்டார்சைக்கிள் ஷோரூம் போன்ற கடைகளின் கதவை உடைத்து மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் திருவண்ணாமலை நகரில் தொடர்ந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள் அசோக்குமார், வனிதா ஆகியோர் மேற்பார்வையில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, சந்திரசேகரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தேரடி தெரு பகுதியில் வாலிபர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று சமுத்திரம் காலனி அருகே மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் வழிப்பறியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை நகரில் பல்வேறு கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 27) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து ஆயிரத்து 200, ஒரு மோட்டார்சைக்கிள், வீச்சரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதத்தில் மட்டும் 27 திருட்டு சம்பவங்களில் ரூ.17 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் திருட்டு போனது. புகாரின் அடிப்படையில் 24 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.


Next Story