எடப்பாடி அருகே, குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
எடப்பாடி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எடப்பாடி,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ராக்கியாம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ், இவரது மகன் சந்தோஷ் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது பேரன் திருச்செங்கோட்டை அடுத்த பொன்னையாரை சேர்ந்த செந்தில் மகன் தியானேஷ் (12). தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தனது பாட்டி வீட்டுக்கு தியானேஷ் வந்துள்ளான்.
இந்த நிலையில் சந்தோஷ், தியானேஷ் ஆகிய 2 பேரும் நேற்று மோரிவளவு பகுதியில் உள்ள ஒரு குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாததால் அவர் கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் கள் சிலர், குட்டையில் குதித்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கொங்கணாபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தோஷ், தியானேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story