குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் அதிகாரியை முற்றுகையிட்ட பொது மக்கள்
ஒடுகத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் காலிகுடங்களுடன் அதிகாரியை முற்றுகையிட்டனர்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு ஒன்றியம் குருவராஜபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுக்கான் கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 3 மாதமாக தண்ணீர் வற்றி போனது. இதனால் அருகில் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் இருந்து பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் தெரிவித்து, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கவேண்டும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது நாள்வரை ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100-கும்மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய ஊரில் இருந்து ஆசனாம்பட்டுக்கு செல்லும் சாலையை நோக்கி நடந்து சென்றனர்.
தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்ய வந்தவர்களை மடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கூறினர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி இமயவரம்பன் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்ய வந்த பொதுமக்களிடம் பேசுச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார். அதற்கு பொதுமக்கள் கடந்த 3 மாதமாக குடிநீர்இன்றி தவித்து வருகிறோம். ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் நீண்ட துாரம் நடந்துசென்று தண்ணீர் எடுத்து வருகிறோம் என்று கூறி அதிகாரி வந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்காலிகமாக தேவையான அளவுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story