கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - விழுப்புரத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - விழுப்புரத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 Aug 2020 3:15 AM IST (Updated: 19 Aug 2020 9:54 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். விழுப்புரத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்து 972 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 4 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலூர் கிராமத்தை சேர்ந்த 58 வயது ஆண், சிறுபனையூர் கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகியோர் நேற்று மூச்சுதிணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர். அதேபோல் இன்னொரு ஆண் நபர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 467 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் சின்னசேலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 3 போலீஸ்காரர்கள் உள்பட 67 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 972-ல் இருந்து 5 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 ஆயிரத்து 390 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 51 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 778 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் மேலும் 114 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.

Next Story