மோட்டார் வாகன விதியை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - விழுப்புரம்- கள்ளக்குறிச்சியில் நடந்தது


மோட்டார் வாகன விதியை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - விழுப்புரம்- கள்ளக்குறிச்சியில் நடந்தது
x
தினத்தந்தி 19 Aug 2020 4:00 AM IST (Updated: 19 Aug 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன விதியை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் விழுப்புரம்- கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

அரசு போக்குவரத்துக்கழகங்களை சீர்குலைக்கும் முயற்சியாக கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288 ஏ-வை கைவிட வேண்டும், போக்குவரத்துக்கழகங்களை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும், தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும், பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கினை கண்டிப்பது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா.தண்டபாணி தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ரகோத்தமன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கணேசன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொ.மு.ச. துணைத்தலைவர்கள் சந்திரசேகர், பெருமாள், தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் வேலு, பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், மனோகரன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் குபேரன், சி.ஐ.டி.யு. நிர்வாகி குணசேகரன், மறுமலர்ச்சி தொழிற்சங்க நிர்வாகி ரவி, அறிவர் அம்பேத்கர் விடுதலை முண்னணி தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story