கோத்தகிரி அருகே, தீயில் கருகி கல்லூரி மாணவி பலி - குளிப்பதற்காக ‘ஹீட்டர்’ போட்டபோது பரிதாபம்
கோத்தகிரி அருகே குளிக்க ‘ஹீட்டர்’ போட்டபோது ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). இவர் தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி யுவராணி (62) ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய ஒரே மகள் ரெனி ஷெர்சியா (18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக தற்போது கல்லூரிகள் திறக்கவில்லை என்பதால் ரெனி ஷெர்சியா வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் உயரமான இடத்தில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுக்க ரெனி ஷெர்சியா முயன்றதாகவும், அப்போது அந்த கேன் தவறி மாணவியின் தலையில் விழுந்ததில் மண்எண்ணெய் கொட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி மாணவி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். அவர் வெந்நீரில் குளிப்பதற்காக கியாஸ் மூலம் செயல்படும் வாட்டர் ஹீட்டர் சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுவிட்சில் இருந்து தீப்பொறி ஏற்பட்டது. இந்த தீப்பொறி மாணவி மீது விழுந்து தீப்பிடித்தது. ஏற்கனவே அவர் மீது மண்எண்ணெய் கொட்டி இருந்ததால், தீ வேகமாக அவருடைய உடல் முழுவதும் பரவியது.
இதனால் அவர் வலிதாங்க முடியாமல் மாணவி அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டதும் பெற்றோர் அலறியடித்து ஓடி சென்று, பார்த்தபோது அவர் மீது தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் மீது பிடித்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ரெனி ஷெர்சியாவை அவர்கள், மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ரெனி ஷெர்சியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குணசேகரன்-யுவராணி தம்பதிக்கு பல ஆண்டாக குழந்தை இல்லாததால், ரெனி ஷெர்சியாவை தத்துதெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது அவர் தீ விபத்து காரணமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story