பொள்ளாச்சி அருகே விபத்து: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் சாவு; நண்பர் படுகாயம் - சோதனைச்சாவடி தடுப்பில் மோதி பரிதாப முடிவு


பொள்ளாச்சி அருகே விபத்து: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் சாவு; நண்பர் படுகாயம் - சோதனைச்சாவடி தடுப்பில் மோதி பரிதாப முடிவு
x
தினத்தந்தி 19 Aug 2020 11:13 AM IST (Updated: 19 Aug 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ஒரே மோட்டார் சைக்கிளில்சென்ற 2 வாலிபர்கள் சோதனைச்சாவடி தடுப்பில் மோதி பரிதாபமாக இறந்தனர். நண்பர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் வசந்தகுமார் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அஜித்குமார் (21). ஆழியாறு அகதிகள் முகாமை சேர்ந்தவர் லியோ என்பவரது மகன் லெஜின் ஆலன்(19). இவர்கள் 3 பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோட்டூர் சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வசந்தகுமார் ஓட்டினார். அஜித்குமார், லெஜின் ஆலன்ஆகியோர் பின்னால் இருந்தனர். மோட்டார் சைக்கிள் ஆழியாறு வனத்துறைசோதனைச்சாவடி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அங்கு உள்ள தடுப்பு மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.ஆனால், செல்லும் வழியில் வசந்தகுமார், லெஜின் ஆலன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அஜித்குமார் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆழியார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 2 வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story