மத்திய அரசு திட்டங்களை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கிறார்கள் பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் பேட்டி


மத்திய அரசு திட்டங்களை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கிறார்கள் பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 20 Aug 2020 3:45 AM IST (Updated: 19 Aug 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு திட்டங்களை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கிறார்கள் என்று பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் லோகநாதன் கூறினார்.

தூத்துக்குடி,

பா.ஜனதா கட்சி மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் லோகநாதன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. 2021 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முக்கிய இடத்தை பிடிக்கும். விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களின் உணர்வு மிக்க வழிபாடு. எனவே தற்போதுள்ள சூழ்நிலை கருதி 5 பேருக்கு மேல் கூடாமல் வழிபாடு நடத்த உள்ளோம். சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லாமல் சிறிய சிலைகளை வைத்து வழிபாடு செய்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து கொள்கிறோம் என்று அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கையை பொறுத்தமட்டில் மக்கள் தெளிவாக உள்ளனர். நாங்களும் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறோம் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இந்தி உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் ஏழை மாணவர்களுக்காக, தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும். இந்தி அனைத்து மாநிலத்துக்கும் இன்று தேவைப்படுகிறது. மேலும் மாணவ பருவத்தில் மூன்றாவதாக ஒரு மொழி படிப்பது சுலபம். மத்திய அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அதை சிலர் அரசியல் லாபத்திற்காக எதிர்க்கிறார்கள். மோடி என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள் என்ற பயத்தின் வெளிப்பாட்டினால்தான் அவர் சொல்வதையெல்லாம் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை வடக்கு, நெல்லை தெற்கு, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் விவேகம் ஜி.ரமேஷ், வணிகர் பிரிவு மாநில தலைவர் ஏ.என்.ராஜகண்ணன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், பொன்குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story