இ-பாஸ் தேவையில்லை; முகக்கவசம் கட்டாயம் மராட்டியத்தில் மாவட்டங்கள் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து - அரசு அறிவிப்பு


இ-பாஸ் தேவையில்லை; முகக்கவசம் கட்டாயம் மராட்டியத்தில் மாவட்டங்கள் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து - அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2020 5:42 AM IST (Updated: 20 Aug 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

\மராட்டியத்தில் மாவட்டங்கள் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் இ-பாஸ் எடுக்க தேவையில்லை எனவும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மும்பை,

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) தனது சேவையை நிறுத்தியது..

ஆனாலும் ஊரடங்கால் சிக்கி தவித்த தொழிலாளர்கள் ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து கடந்த மே 22-ந் தேதி முதல் எம்.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. பயணிகள் அனைவரும் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. மேலும் மும்பை பெருநகர பகுதிக்குள் (மும்பை, தானே, பால்கர் மாவட்டங்கள் இடையே) தனியார் ஊழியர்கள் பணிக்கு சென்று வர வசதியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் அவசர தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

பஸ் போக்குவரத்தை முழுமையாக தொடங்க வேண்டும் என்று பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான பகுஜன் விகாஷ் அகாடி கட்சியும் போராட்டம் நடத்தி வந்தது.

இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வாக மாவட்டங்களுக்கு இடையே இன்று(வியாழக்கிழமை) முதல் பஸ் போக்குவரத்தை தொடங்க எம்.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குனரும், துணை தலைவருமான சேகர் சன்னே கூறுகையில், “மாவட்டங்களுக்கு இடையே எம்.எஸ்.ஆர்.டி.சி. பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி பஸ் சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.

பஸ் போக்குவரத்து தொடங்கும் நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் இ-பாஸ் எடுக்க தேவையில்லை. வேறு எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் கொரோனா பரவல் தடுப்புக்காக எடுக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி முகக்கவசம் கட்டாயம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து புனே போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி தியானேஸ்வர் கூறுகையில், “அரசு அனுமதியை அடுத்து போக்குவரத்து கழகத்தின் புனே பிரிவின் சார்பில் பஸ் சேவையை தொடங்க தயாராகி உள்ளோம். புனேயில் இருந்து மும்பையின் தாதர், போரிவிலி மற்றும் தானே, நாசிக், பண்டர்பூர், ஜல்காவ், கோலாப்பூர், அவுரங்கபாத், நாசிக், சோலாப்பூர் ஆகிய வழித்தடங்களில் காலை 7 மணி முதல் பஸ்களை இயக்க உள்ளோம். ஒவ்வொரு பஸ்சிலும் 22 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என்றார்.

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து கழகமான எம்.எஸ்.ஆர்.டி.சி.க்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இருப்பதும், சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தினமும் சுமார் 65 லட்சம் பயணிகள் எம்.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்படுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story