வாலிபர் கொலையில் கள்ளக்காதலி உள்பட 6 பேர் கைது


வாலிபர் கொலையில் கள்ளக்காதலி உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2020 6:55 AM IST (Updated: 20 Aug 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலை வழக் கில் கள்ளக்காதலி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 20). இவர் கைகளில் பச்சை குத்தும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே தாம்பரம் நோக்கி செல்லும்போது பின்னால் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் நிரஞ்சனை வழிமறித்து உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை போலீசார் மடக்கி விசாரித்தபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதையடுத்து காரில் வந்த 4 வாலிபர்கள் மற்றும் டிரைவர் உள்பட 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சபரிநாதன் (19), தினேஷ் (31), கோகுல் (21), பாலாஜி (19), அருண் (19) என்பதும், இவர்கள்தான் நிரஞ்சனை அடித்துக்கொலை செய்ததும் தெரிந்தது.

இவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் அளித்த தகவலின்பேரில் காட்டாங்கொளத்தூர் ராஜாஜி தெருவில் வசிக்கும் நிரஞ்சனின் கள்ளக்காதலி அமலா(25) என்பவரையும் கைது செய்தனர். இது குறித்து போலீசாரிடம் அமலா கூறியதாவது.

ஏற்கனவே திருமணம் ஆன நான், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நேரத்தில் நிரஞ்சனுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதலர்களாக வாழ்ந்து வந்தோம். நிரஞ்சனுக்கு தெரியாமல் மறைமலைநகரை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்து பழகி வந்தேன்.

இதனை அறிந்த நிரஞ்சன் நேற்று முன்தினம் எனது வீட்டுக்கு வந்து என்னை மிரட்டியதால், பயந்து போன நான், இது குறித்து மற்றொரு கள்ளக்காதலன் தினேஷ் மற்றும் அவரது நண்பர் சபரிநாதன் ஆகியோருக்கு செல்போன் மூலம் தெரிவித்தேன். இதையடுத்து தினேஷ், சபரிநாதன் இருவரும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து நிரஞ்சனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்துவிட்டார்கள்.

இவ்வாறு அமலா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான அமலா உள்பட 6 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story