கொரோனா பரவலை கட்டுப்படுத்த வடுவூர், திருவாரூரில் கடைகள் அடைப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வடுவூர் மற்றும் திருவாரூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
வடுவூர்,
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் தினமும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. டெல்டாவில் உயிரிழப்பு 124- ஆக உயர்ந்து உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தின் வடுவூர் பகுதி தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட எல்லையில் உள்ளது. வடுவூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மூலம் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் வடுவூர் நல வர்த்தகர் சங்கம் சார்பில் கடைகளை மூடி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என முடிவு செய்தனர்.
இதன்படி நேற்று வடுவூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. மளிகை, காய்கறி, உரக்கடை, டீக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. மெயின் ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, அம்மாப்பேட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் எந்த கடையும் திறக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதால் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த கடை அடைப்பு 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீடிக்கும் என வடுவூர் வர்த்தக சங்க செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல் திருவாரூர் அருகே இலவங்கார்குடி ஊராட்சி பவித்திரமாணிக்கம் பகுதியில் 2 நாட்களுக்கு முழு கடை அடைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் பவித்திரமாணிக்கம் பகுதியில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முழு கடை அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story