தோகைமலை அருகே, தனியார் நிறுவனத்தினர் மீண்டும் சாலை அமைக்க வந்ததால் பரபரப்பு


தோகைமலை அருகே, தனியார் நிறுவனத்தினர் மீண்டும் சாலை அமைக்க வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Aug 2020 3:15 AM IST (Updated: 20 Aug 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே தனியார் நிறுவனத்தினர் மீண்டும் சாலை அமைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி தென்நகர் பகுதியில் அரியாற்றின் வடக்கு கரையில் தனியார் நிறுவனத்தினர் கடந்த சில நாட்களுக்குமுன்பு தங்களது நிறுவனத்துக்கு சென்று வர சாலை அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தோகைமலை ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, மறு ஒப்புதல் வரும்வரை தனியார் நிறுவனம் சாலை அமைக்க மாட்டார்கள் என்றும், மேலும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் தனியார் நிறுவனத்தினர் அனுமதியின்றி சாலை அமைத்தார்களாம். இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பொதுமக்கள் வந்து தடுத்தனர். தகவல் அறிந்த குளித்தலை தாசில்தார் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் நீதிராஜன், வடசேரி கிராமநிர்வாக அதிகாரி அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் பிரச்சினைக்குரிய இடத்துக்கு வந்து உரிய அனுமதியில்லாமல் சாலை அமைக்க கூடாது என்று எச்சரித்தனர்.

ஆனால் பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை கைவிடாவிட்டால் சாலைமறியலில் ஈடுபடுவோம் என்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் சமாதானத்தை தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வெங்கடேஸ்வரன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story