விஷம் கொடுத்து கொன்றதாக கணவர் குடும்பத்தினர் மீது புகார்: பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா


விஷம் கொடுத்து கொன்றதாக கணவர் குடும்பத்தினர் மீது புகார்: பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா
x
தினத்தந்தி 20 Aug 2020 4:00 AM IST (Updated: 20 Aug 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

விஷம் கொடுத்து கொலை செய்ததாக கணவர் குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண்ணின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கொளப்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் படித்துள்ள விஜயலட்சுமிக்கும் (வயது 23) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலசுப்பிரமணியனும், அவரது தம்பி ராதாகிருஷ்ணனும் துபாயில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் திருமணத்திற்காக, அவரும், அண்ணன் பாலசுப்பிரமணியனும் கடந்த மார்ச் மாதம் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். பின்னர் திருமணம் முடிந்தும், கொரோனா ஊரடங்கினால் மீண்டும் துபாய்க்கு செல்லாமல் அவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணியனின் மனைவி விஜயலட்சுமி பூச்சி மருந்து (விஷம்) குடித்தார். அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்து விஜயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடினர். பின்னர் அவர்கள் விஜயலட்சுமியை, அவருடைய கணவர் குடும்பத்தினர் தான் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, விஷம் கொடுத்து கொலை செய்து விட்டதாக பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், அவர்களது தந்தை கனகசபை, தாய் தமிழரசி ஆகியோர்கள் மீது புகார் கூறினர். மேலும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரேத பரிசோதனை அறைக்கு முன்பு அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த குன்னம் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, அவர்கள் தர்ணாவை கைவிட்டு, பிரேத பரிசோதனை முடிந்த விஜயலட்சுமியின் உடலை வாங்கி சென்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story