ஈரோட்டில், பொது கழிப்பிடத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
ஈரோட்டில் பொது கழிப்பிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி 58-வது வார்டுக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் செங்கூட்டுவன் வீதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக அங்குள்ள பொதுக்கழிப்பிடத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பொதுக்கழிப்பிடத்தை இடிக்காமல் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை பொக்லைன் எந்திரம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது பொதுக்கழிப்பிடத்தை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “பொதுக்கழிப்பிடத்தை இடித்துவிட்டால் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே கழிப்பிடத்தை இடிக்கக்கூடாது”, என்றனர். அதற்கு அதிகாரிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுக்கழிப்பிடம் இடிக்கப்படாமல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story