கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட நடுஹட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.15.84 லட்சத்தில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, பெத்தளா ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தளாவில் ரூ.11.85 லட்சத்தில் அமைக்கப் பட்ட கான்கிரீட் சாலை, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.91.21 லட்சத்தில் கொணவக்கரை ஊராட்சிக்குட்பட்ட அட்டடியில் போடப்பட்ட கான்கிரீட் சாலை.
14-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.14.42 லட்சத்தில் முல்லை நகர் முதல் இம்பியாடாமட்டம் வரை முடிக்கப்பட்ட சாலை, நவக்கரை எவில் தேயிலை தோட்டம் வரை ரூ.5.75 லட்சத்தில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, கொட்டக்கம்பை பகுதியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் காலனி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்தில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள், கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிகள் போன்ற வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து சாலையோரம் உள்ள முட்புதர் களை அகற்றி தடுப்பு சுவர்களை மேம்படுத்தி தரமான சாலைகள் அமைக்க வேண்டும், கிராம சாலைகளில் பெயர் பலகைகளை வைக்குமாறும், பழுதடைந்துள்ள தடுப்புச்சுவர்களை உடனடியாக சரி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் குப்பைகளை ஓடைகளில் கொட்டாமல் குப்பை தொட்டியில் கொட்டி, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து உள்ளனரா என அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஜெயபாலன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து ஜக்கனாரை ஊராட்சியில் கலெக்டர் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
Related Tags :
Next Story