நெமிலி அருகே, தனியார் நிறுவன வேன்-பஸ் நேருக்கு நேர் மோதல் - 19 பேர் படுகாயம்
நெமிலி அருகே தனியார் நிறுவன வேன்-பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
நெமிலி,
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய பணியாளர்களை ஏற்றிக்கொண்டு நெமிலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேன் நெமிலியை அடுத்த சயனபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு தனியார் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் வேனில் பயணம் செய்த 19 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் வேன் டிரைவர் மணி என்பவர் இடிபாடுகளில் சிக்கி கொண்டதால், பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு மீட்கப்பட்டார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story