மாவட்டத்திற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை - ரூ.243½ கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


மாவட்டத்திற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை - ரூ.243½ கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x

நாமக்கல் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகிறார். இதையொட்டி அவர் ரூ.243 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

நாமக்கல், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த நிகழ்வின்போது முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் அவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கொரோனா தடுப்பு பணிகளை அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு செய்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்குகிறார். சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா முன்னிலை வகிக்கிறார்.

இதையொட்டி முதல்-அமைச்சர் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.14 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் 26 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.137 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 130 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 19,132 பயனாளிகளுக்கு ரூ.91 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.243 கோடியே 35 லட்சம் ஆகும்.

இதையடுத்து அவர் சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது. சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வருகை தொடர்பான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story