விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை: ஐகோர்ட்டு தீர்ப்புபடி தமிழக அரசு செயல்படும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி


விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை: ஐகோர்ட்டு தீர்ப்புபடி தமிழக அரசு செயல்படும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Aug 2020 4:15 AM IST (Updated: 21 Aug 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், ஐகோர்ட்டு தீர்ப்புபடி தமிழக அரசு செயல்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வேலூர்,

வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு அறிவித்த நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதால் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 2 லட்சத்து 96 ஆயிரத்து 121 பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் 6,123 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் ரூ.354 கோடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.297 கோடியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.98 கோடியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. வேலூரில் ரூ.16 கோடியே 45 லட்சத்தில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் இந்த விளையாட்டு மைதானம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பொன்னையாற்றின் குறுக்கே ரூ.13 கோடியே 92 லட்சத்தில் தடுப்பணை கட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி ரூ.40 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. அதேபோன்று மகேந்திரவாடி ஏரி கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சோளிங்கர்- ஆற்காடு புறவழிச்சாலை, குடியாத்தம் புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்ததும் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

ராணிப்பேட்டையில் வெளியூரை சேர்ந்த மகளிர் அதிக அளவில் வேலை பார்ப்பதால் அவர்களுக்கு விடுதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இது அரசின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். திருப்பத்தூரில் மகப்பேறு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. திருப்பத்தூர், ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். தென்பெண்ணை- பாலாறு இணைப்பு 54 கிலோ மீட்டர்

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் குரோமியம் கழிவுகளை அகற்ற மத்திய அரசிடம் ரூ.600 கோடி கேட்கப்பட்டுள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இடநெருக்கடி காரணமாக காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் 34 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளனர். அதில் மார்க்கெட் கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

2005-ம் ஆண்டே பத்தலப்பள்ளியில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு காரணங்களினால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் வலியுறுத்தியதன் காரணமாக ரூ.122 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு அரசிற்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது?

பதில்:- இன்னும் முழுமையான கணக்கு வரவில்லை. அதிகமான இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காததால் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாய் வராமல் பெருமளவு இழப்பு ஏற்பட்டிருந்தாலும், அ.தி.மு.க. அரசு மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிந்தாமல், சிதறாமல், எவ்வித தொய்வும் இல்லாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து இருக்கிறீர்கள். டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்தபோது, விநாயகர் சிலைகளுக்கு அனுமதி இல்லையா?

பதில்:- நேற்றைய தினமே ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அரசு செயல்படும். ஏற்கனவே மத்திய அரசாங்கம் சில வழிகாட்டு முறைகளை அறிவித்திருக்கின்றது. ஊரடங்கு சட்டம் அமல்படுத்தும்பொழுது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மதத்தின் சார்பாக ஊர்வலங்களோ, பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- ரேஷன் கடைகளில் வழங்கப்படும் முக கவசங்கள் தரமற்றதாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:- இவையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில்தான் முறையாக அந்தத்துறை பரிசீலித்து சோதனை செய்துதான் பெற்றிருக்கிறார்கள். அப்படி ஏதாவது புகார் வந்தால் அதை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- நதிகள் இணைப்பைப் பற்றி...

பதில்:- நதிகள் இணைப்பை பொறுத்தவரை, தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். நதிகள் இணைப்புத் திட்டம் என்பது பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. மத்திய அரசிற்கு கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று 2 நாட்களுக்கு முன் ஜல்சக்தி துறை மந்திரியோடு காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்களின் நிலவரத்தை எல்லாம் மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசு, பல்வேறு திட்டங்களில் உதவுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story