ரூ.1,000 கோடியில் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


ரூ.1,000 கோடியில் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Aug 2020 4:45 AM IST (Updated: 21 Aug 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1,000 கோடியில் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று வேலூரில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வேலூர்,

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முதல் நிகழ்ச்சியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தபடி 3 மாவட்டங்களிலும் ஏற்கனவே ரூ.50 கோடியே 51 லட்சத்தில் முடிக்கப்பட்ட 13 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் ரூ.73 கோடியே 53 லட்சத்தில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 18,589 பயனாளிகளுக்கு ரூ.169 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக 5-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவி உள்ளது. தமிழகத்தில் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு சிறப்பு முயற்சிகள் எடுத்தாலும், கொரோவை முழுமையாக ஒழிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். கொரோனா தொற்றால் தமிழகம், இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உயிர் பிரச்சினையாக இருப்பதால், அரசு எச்சரிக்கையுடன் கையாளுகிறது. நோய் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தொடர்ந்து தமிழக அரசு கடைப்பிடித்தது. அதன் பின்னர் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது நோய் பரவுவதை தடுக்க இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் இ-பாஸ் முறையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் இ-பாஸ் பெறும் முறையில் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தி வருகிறார்கள். வேறு நோய்கள் காணப்படும் நபர்களுக்கு இந்த தொற்று எளிதில் பரவி விடுகிறது. எனவே அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு உயிரும் அரசுக்கும் முக்கியம். அனைவரையும் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே அதிகளவு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி, அந்த மாவட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளன. நோயை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுனர்களுடன் ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்துகிறோம். அவர்கள் அளிக்கும் நோய் தடுப்பு ஆலோசனைகளையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நோயை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.

நோய் பரவலை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. இதில், பொதுமக்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாம் மூலம் தமிழகத்தில் நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. நடமாடும் மருத்துவமனை மூலம் தொற்று அதிகமாக காணப்படும் பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 3 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கும் மாநிலம் தமிழகம் என்று பெயர் எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகம். இறப்பு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகள் நடைபெற்ற ஏரி, குளங்களில் நீர் நிரம்பி உள்ளது. பருவமழை முழுமையாக பெய்யும்போது அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும். தென்மேற்கு பருவமழை 3 மாவட்டங்களிலும் பெய்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் பிரச்சினை இல்லை. மழை பொழிவு காரணமாக விவசாயத்துக்கு தேவையான நீரும் கிடைக்கிறது.

பாலாற்றில் எந்தெந்த இடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிவிக்கும் அறிக்கையின்படி அந்த இடத்தில் தடுப்பணை கட்டப்படும். ரூ.1,000 கோடி செலவில் 3 ஆண்டுகளில் தடுப்பணைகள் கட்டப்படும்.

தமிழக அரசு வேளாண் பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் சொட்டு நீர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறி, பழங்களுக்கு உரிய விலைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பால் உற்பத்தியை பெருக்கவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 3 மாவட்டங்களிலும் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. தோல் தொழிற்சாலைகள் மூலம் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பொருளாதார மேம்பாடு அதிகமாக உள்ளது. தோல் மற்றும் காலணி (ஷு) தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவி வழங்கப்படும். மக்களுக்கு தேவையான திட்டங்கள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), முகம்மது ஜான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், சம்பத், அரசு அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story