ஜாமீனில் வந்த ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது மகனின் கொலைக்கு தந்தை பழி தீர்த்தது அம்பலம்


ஜாமீனில் வந்த ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது மகனின் கொலைக்கு தந்தை பழி தீர்த்தது அம்பலம்
x
தினத்தந்தி 21 Aug 2020 6:56 AM IST (Updated: 21 Aug 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வந்த ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மகனின் கொலைக்கு தந்தை பழி தீர்த்தது அம்பலமானது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மாதவன் (வயது 26). இவர், கடந்த 15-ந் தேதி இரவு புதுகும்மிடிப்பூண்டி அரசினர் மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள தைல மரத்தோப்புக்கு அழைத்துச்சென்று மது கொடுத்து கொலை செய்யப்பட்டார். அவரது தலை, கை மற்றும் கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது.

மாதவனின் உடலை தைலமரத்தோப்பில் போட்டுவிட்டு அவரது தலையை மட்டும் அங்கிருந்து கொண்டு வந்து கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே காட்சி பொருளாக வைத்துவிட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ம.பொ.சி.நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஆகாஷ் (17), அவரது நண்பர்களான கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவை சேர்ந்த விமல் (21) மற்றும் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ் (26) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மொத்தம் 11 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த 11 பேரில் ஆத்துப்பாக்கத்தை சேர்ந்த ரவுடி மாதவனும் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாதவன் மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

கடந்த ஆண்டு தனது மகன் ஆகாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில், ஆகாஷின் தந்தையான ரமேஷ் (44) திட்டமிட்டு ரவுடி மாதவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்படி மாதவனை புதுகும்மிடிப்பூண்டி தைலமரத்தோப்பிற்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து வெட்டிக்கொலை செய்து பின்னர் அவரது தலையை மட்டும் மகன் ஆகாஷ் கொல்லப்பட்ட ரெயில் நிலைய பகுதியில் வைத்து சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக ஆகாஷின் தந்தை ரமேஷ், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவர்கள் என மொத்தம் 4 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story