சாதி பாகுபாடு காரணமாக எதிர்ப்பு: பெண் ஊராட்சி தலைவரை தேசிய கொடி ஏற்ற வைத்த கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் பெயரும் எழுதப்பட்டது


சாதி பாகுபாடு காரணமாக எதிர்ப்பு: பெண் ஊராட்சி தலைவரை தேசிய கொடி ஏற்ற வைத்த கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் பெயரும் எழுதப்பட்டது
x
தினத்தந்தி 21 Aug 2020 7:06 AM IST (Updated: 21 Aug 2020 7:06 AM IST)
t-max-icont-min-icon

சாதி பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து பெண் ஊராட்சி தலைவரை மாவட்ட கலெக்டர் தேசிய கொடி ஏற்ற வைத்தார். அலுவலக கட்டிடத்தில் அவரது பெயரும் எழுதப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவராக இருப்பவர் அமிர்தம் (வயது 60). இவர், சாதி பாகுபாடு காரணமாக சுதந்திர தினத்தன்று தான் தேசிய கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், தன் பெயரை இதுவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுதவில்லை என்றும், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சாவி, கணக்கு வழக்குகள் ஆகியவற்றை ஊராட்சி மன்ற செயலாளரே வைத்துக்கொண்டு செயல்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினார்.

இதுபற்றி விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர், ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு உறுதுணையாக இருந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஊராட்சி தலைவர் அமிர்தத்தை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரவழைத்து, அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் கவுரவித்தார்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு ஊராட்சி தலைவர் அமிர்தத்தை அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் அமிர்தத்தை தேசிய கொடி ஏற்ற வைத்தனர். அத்துடன் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் அமிர்தத்தின் பெயரும் எழுதப்பட்டது.

இதனையடுத்து நிருபர்களிடம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக அமிர்தம், ஜனநாயக கடமையாற்றுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்க புதிய ஊராட்சி மன்ற செயலாளர் நியமிக்கப்பட்டு தலைவருடன் இணைந்து செயலாற்றவும், அதனை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டப்படி மக்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்களோ அவர்கள்தான் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரை சார்ந்தவர்கள் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊராட்சி தலைவர் அமிர்தம் கூறியதாவது:-
நான் ஒரு கூலித்தொழிலாளி. என் கணவரும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஊராட்சி பொதுமக்கள் என்னை தலைவராக தேர்வு செய்தும் ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிலரால் புறக்கணிக்கப்பட்டேன். நான் தலைவர் பதவிக்கு தேர்வாகி 9 மாதங்கள் ஆகியும் ஊராட்சி நிர்வாகத்தை நேரடியாக கவனிக்க முடியாத சூழலும், சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றவும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்ற வைத்து என்னை கவுரவப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story