வீடு புகுந்து மூதாட்டியின் வாயை துணியால் கட்டி நகை பறிப்பு இளம்பெண் கைது


வீடு புகுந்து மூதாட்டியின் வாயை துணியால் கட்டி நகை பறிப்பு இளம்பெண் கைது
x
தினத்தந்தி 21 Aug 2020 7:17 AM IST (Updated: 21 Aug 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியின் வாயை துணியால் கட்டி நகையை பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சிவசிதம்பரம். இறந்துவிட்டார். இவருடைய மனைவி மசிரியம்மாள் (வயது 70). இவர்களுடைய மகன்கள் வெள்ளியங்கிரி, ஆதவன். 2 பேருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். எனவே மசிரியம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று பகல் 11 மணி அளவில் ஒரு பெண் செங்குந்தபுரம் பகுதிக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மசிரியம்மாளிடம் அந்த பகுதியில் வீடு எதுவும் வாடகைக்கு உள்ளதா? எனக்கேட்டு உள்ளார். மேலும் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்ற பெண் திடீரென மூதாட்டியின் வாயை துணியால் கட்டியதுடன், தான் கொண்டு வந்த கர்சீப்பால் அவருடைய கையையும் கட்டி உள்ளார். பின்னர் மசிரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்துவிட்டு வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறினார்.

கைது

அந்த பெண் சென்ற பிறகு, மசிரியம்மாள் மெதுவாக நடந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மூதாட்டியின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மூதாட்டியின் வாயில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றி விவரத்தை கேட்டனர். அப்போது வீடு புகுந்து ஒரு பெண் தன்னிடம் நகை பறித்து சென்றதை அவர் கூறினார். உடனே அக்கம் பக்கத்தினர் செங்குந்தபுரம் மற்றும் அருகில் உள்ள தெருக்களில் தேடி உள்ளனர். அப்போது அருகில் உள்ள தெருவில் பெண் ஒருவர் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘அந்த பெண் புஞ்சைபுளியம்பட்டி பன்னீர்செல்வம் வீதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரின் மனைவி ஆனந்தி (25), தையல் தொழிலாளியான அவர் வீடு புகுந்து மசிரியம்மாளிடம் நகையை பறித்து சென்றதும்,’ தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆனந்தியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 3½ பவுன் நகையையும் மீட்டனர்.

Next Story