சதுர்த்தி விழா ஊர்வல தடையால் விநாயகர் சிலைகள் விற்பனை பாதிப்பு


சதுர்த்தி விழா ஊர்வல தடையால் விநாயகர் சிலைகள் விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 9:40 AM IST (Updated: 21 Aug 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் பொதுஇடத்தில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம் சிலை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக் கப்படுகிறது. அதில் திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டியிலும் விநாயகர் சிலைகள், சுடுமண் பொம்மைகள் தயாரிக்கப்படுவது வழக்கம். இங்கு வழக்கமாக 1 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். அந்த சிலைகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சிலை தயாரிப்பு

ஆனால், அரசு தடை விதித்ததால் பெரிய சிலைகள் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் வீடுகளில் சிறிய அளவில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு வசதியாக ½ அடி, 1 அடி, 1½ அடி உயரத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், வியாபாரிகள் சிலைகளை வாங்க வராததால் சிலைகள் விற்பனை ஆகாமல், தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் கஜேந்திரன் கூறுகையில், தடை வரும் என்பது தெரியாததால் பெரிய சிலைகளை தயாரித்தவர்கள், விற்க முடியாமல் தவிக்கின்றனர். நல்லவேளையாக நாங்கள் பெரிய சிலைகளை தயாரிக்கவில்லை. எனினும், ரூ.50 முதல் ரூ.150 வரையிலான சிறிய சிலைகளை தயாரித்துள்ளோம். பொதுவாக சிறிய சிலைகளை சாலையோர வியாபாரிகள் வாங்கி சென்று, சதுர்த்தி தினத்தில் விற்பார்கள். அதை பொதுமக்கள் வாங்கி சென்று வீட்டில் வைத்து பூஜை செய்வார்கள்.

பாதிப்பு

ஆனால், சாலையோரத்தில் சிறிய விநாயகர் சிலைகளை விற்க அனுமதி கிடைக்குமா? என்று வியாபாரிகள் சந்தேகம் அடைந்துள்ளதால், அதை வாங்குவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் சிறிய சிலைகளை கூட விற்க முடியவில்லை. ஏற்கனவே கொரோனாவால் சுடுமண் பொம்மைகள், சிலைகள் தயாரிக்கும் தொழில் முற்றிலும் நலிவடைந்து விட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவில் ஓரளவு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். தற்போது அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறிய சிலைகளை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும், என்றார்.

Next Story