மோட்டார் சைக்கிள் ரோந்து போலீஸ் தனிப்படை உருவாக்கம் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்


மோட்டார் சைக்கிள் ரோந்து போலீஸ் தனிப்படை உருவாக்கம் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Aug 2020 4:15 AM IST (Updated: 21 Aug 2020 11:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் ரோந்து போலீஸ் தனிப்படையை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக ‘பிரிகேட்‘ என்னும் பெயரில் தனிப்படை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட 16 புதிய இரு சக்கர புதிய வாகனங்கள் ஒதுக்கப்பட்டு, அதில் அவசர ஒலிப்பான், ஒளிரும் விளக்குகள், சிறிய ஒலி பெருக்கி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி தனிப்படையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

மோட்டார் சைக்கிள் ரோந்து தனிப்படையினருக்கு வழங்கப்பட்ட ரோந்து வாகனத்தில் ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்யக்கூடிய அளவுக்கு, அதற்கான மருந்து பொருட்கள் தயார் நிலையில் இருக்கும். இந்த 16 வாகனங்களில் தூத்துக்குடி உட்கோட்டத்துக்கு 5 மோட்டார் சைக்கிள்களும், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டிக்கு தலா 2 மோட்டார் சைக்கிள்களும், மணியாச்சி, விளாத்திகுளம், சாத்தான்குளத்துக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிளும் ரோந்து பணிக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த‘பிரிகேட்‘ தனிப்படை மேலும் விரிவுபடுத்தப்படும்.

இந்த ரோந்து போலீசார், அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் உத்தரவுப்படி, அவர்கள் பணியாற்ற வேண்டிய இடங்கள் ஒதுக்கப்படும். இவர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளார்கள் என்பது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு மூலம் கண்காணிக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் அருகில் இருக்கும் இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டு, அவர்கள் சென்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

ரவுடி துரைமுத்துக்கு வெடிகுண்டு கிடைத்தது குறித்து தீவிர விசாரணை: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், மணக்கரை அருகே போலீஸ்காரர் சுப்பிரமணியன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து உள்ளோம். அவர்கள் தொடர்ந்து ரவுடிகளை பிடித்து வருகின்றனர். அதே போன்று மணக்கரையில் ரவுடி துரைமுத்துக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது, எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

மணக்கரை பகுதியில் அவர்கள் தங்கி இருந்து உள்ளனர். அந்த பகுதியில் வெடிகுண்டு தயாரிக்கப்படவில்லை. எங்கு தயாரிக்கப்பட்டது என்பதையும் கண்டிப்பாக கண்டுபிடிப்போம். அந்த பகுதியில் இருந்து ஒரு வெடிக்காத குண்டு பறிமுதல் செய்து உள்ளோம். தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினோம். ஆனால் வேறு வெடிகுண்டும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரவுடி துரைமுத்து இறுதி சடங்கின் போது அவரது உடல் மீது அரிவாள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story