ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் குத்திக்கொலை தொழிலாளி கைது


ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் குத்திக்கொலை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Aug 2020 3:00 AM IST (Updated: 21 Aug 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் மதன் (வயது 31). இவர் குறுக்குச்சாலையில் வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு ஜெய இந்திரா என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மதன், மேலமுடிமண்ணை சேர்ந்த திருமணமாகி 2 நாட்கள் ஆன ஒரு இளம்பெண்ணை தன்னோடு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், மதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மதன் நேற்று மேலமுடிமண் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு அந்த இளம்பெண்ணின் உறவினரான தொழிலாளி மாரிமுத்து (36) என்பவர் வந்து இருந்தார். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாரிமுத்து அவருடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மதன், மாரிமுத்து வீட்டின் அருகே வந்து உள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு மதன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து, மேலமுடிமண் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்த மதனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மதன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story