நெல்லையில் பயங்கரம்: திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை, உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு-5 பேர் கைது


நெல்லையில் பயங்கரம்: திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை, உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு-5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2020 5:00 AM IST (Updated: 22 Aug 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தவர் பவானி (வயது 28). திருநங்கையான இவரும், முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டியைச் சேர்ந்த பெயிண்டர் முருகனும் (30) திருநங்கை காலனியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு குழந்தையை தத்தெடுக்க எண்ணினர்.

இதனை அறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற தங்கவேல் (30), முருகன்-பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கினார். ஆனாலும் தங்கவேல், குழந்தையை தத்து எடுத்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

எனவே முருகன்-பவானி ஆகியோர் தங்களுக்கு குழந்தையை தத்தெடுத்து தருமாறும், இல்லையெனில் பணத்தை திருப்பி தருமாறும் தங்கவேலிடம் கூறினர். இதையடுத்து கடந்த 19-ந் தேதி தங்கவேல் தனது சொந்த ஊரான சேலத்துக்கு சென்று, குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, முருகன்-பவானி ஆகியோரை காரில் அழைத்து சென்றார். அப்போது பவானி, அப்பகுதியைச் சேர்ந்த தனது தோழியான அனுஷ்கா (24) என்ற திருநங்கையையும் தங்களுடன் காரில் அழைத்து சென்றார்.

பின்னர் தங்கவேல் மட்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளுக்கு திரும்பி வரவில்லை. அவர்களது செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்ற திருநங்கைகள், இதுதொடர்பாக தங்கவேலிடம் கேட்டனர். அப்போது அவர், முருகன் தனது சொந்த ஊரான காரியாண்டிக்கு பவானி, அனுஷ்கா ஆகியோரை அழைத்து சென்று இருக்கலாம் என்று கூறினார். உடனே திருநங்கைகள், காரியாண்டியில் உள்ள முருகனின் உறவினர்களிடம் விசாரித்தனர்.

அப்போது முருகன் உள்பட 3 பேரும் அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. எனவே முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரையும் தங்கவேல் கடத்தி சென்று இருக்கலாம் என்று திருநங்கைகள் அச்சம் அடைந்தனர். மாயமான 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பவானி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருநங்கைகள், முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறி, கதறி அழுதவாறு நேற்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் தங்கவேல், அவருடைய மனைவி ரேணுகா, தங்கவேலின் தங்கை ஹரினா, டிரைவர் செல்லத்துரை என்ற ராஜா (33), பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஸ்னோவின் (29) ஆகிய 5 பேரையும் பிடித்து திருநங்கைகள், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு.

முருகன்-பவானி ஆகிய 2 பேரும் நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தாலும், பாளையங்கோட்டை மகராஜநகரிலும் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்தவாறு முருகன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் முருகன்-பவானி ஆகிய 2 பேரும் குழந்தையை தத்தெடுப்பதற்காக தங்கவேலிடம் ரூ.3 லட்சம் வழங்கினர். பின்னர் தங்கவேல் குழந்தையை தத்தெடுத்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் தாமதப்படுத்தி வந்தார். இதுதொடர்பாக முருகன்-பவானி ஆகிய 2 பேரும் அடிக்கடி தங்கவேலிடம் தொந்தரவு செய்ததால், அவர்களை தீர்த்துக்கட்டுவதற்கு தங்கவேல் திட்டமிட்டார்.

அதன்படி முருகன்-பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, அவர்களை சேலத்துக்கு காரில் அழைத்து செல்வதாக தங்கவேல் கூறினார். அதன்படி பாளையங்கோட்டை மகாராஜநகரில் இருந்து காரில் புறப்பட்டு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் அனுஷ்காவும் செல்ல முடிவு செய்தார்.

சம்பவத்தன்று இரவில் பாளையங்கோட்டை மகராஜநகரில் இருந்து அனைவரும் காரில் சேலத்துக்கு புறப்பட தயாராக இருந்தனர். அப்போது தங்கவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரையும் கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் வைத்து கட்டினர்.

பின்னர் அவர்களது உடல்களை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கக்கன்நகர் நாற்கரசாலை அருகில் உள்ள பாழடைந்த 2 கிணறுகளில் வீசினர். 2 பேரின் உடல்கள் ஒரு கிணற்றிலும், மற்றொருவரின் உடல் இன்னொரு கிணற்றிலும் கிடந்தது.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பவானி உள்ளிட்ட 3 பேரும் கொலை செய்யப்பட்ட, பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வீடு முழுவதும் ரத்தக்கறை சிதறி கிடந்தது. அங்கு தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மற்றும் போலீசார், பவானி உள்ளிட்ட 3 பேரின் உடல்களும் சாக்கு மூட்டைகளில் கட்டி வீசப்பட்டு கிடந்த கிணறுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதுதொடர்பாக தங்கவேல், ரேணுகா, ஹரினா, செல்லத்துரை, ஸ்னோவின் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில், திருநங்கைகளுக்காக 29 குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது. அதில் திருநங்கைகளே வசித்து வருகின்றனர்.

திருநங்கை காலனியில் வசித்த முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

பவானி கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பான புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, சக திருநங்கைகள் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் கொலைக்கு காரணமானவர்களையும்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருநங்கைகள் உள்ளிட்ட 3 பேரையும் கொலை செய்தவர்ளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கொலையை செல்போனில் எடுத்த கூட்டாளி
முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டபோது, தங்கவேலின் கூட்டாளிகளில் ஒருவர், அவற்றை செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். அந்த புகைப்படம், ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்தே முருகன் உள்ளிட்ட 3 பேரும் கொலை செய்யப்பட்டது வெளிஉலகுக்கு தெரியவந்தது.

கொலையான முருகனுக்கு சொந்த ஊர் காரியாண்டி ஆகும். அவருடைய தந்தை சுப்பிரமணியன். முருகனுக்கு 3 அண்ணன்களும், ஒரு அக்காளும் உள்ளனர். குடும்பத்தில் இளைய மகனாக இருந்த முருகன், கடந்த சில ஆண்டுகளாக பவானியுடன் பழகி வந்தார். நெல்லையிலேயே தங்கியிருந்து பெயிண்டர் வேலைக்கும் சென்று வந்தார். இந்த நிலையில் அவர் திருநங்கைகளுடன் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்ட முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரின் உடல்களையும் வீசிய கிணறுகளை, தங்கவேல் உள்ளிட்டவர்கள் அடையாளம் காட்டினர். தொடர்ந்து மாலையில் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள், அந்த கிணறுகளில் கயிறு கட்டி இறங்கி, 3 பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது சக திருநங்கைகள் கண்ணீர் விட்டு, கதறி அழுதனர்.

கொலையான 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கக்கன் நகர் நாற்கரசாலை அருகில் 2 கிணறுகளும் அருகருகே அமைந்து உள்ளதால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், கிணறுகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை மீட்கும் பணியை பார்த்தனர்.

ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு
முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் மாயமானது தொடர்பாக சக திருநங்கைகள் அளித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மாயமான அவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு, சாக்குமூட்டைகளில் கட்டி வீசப்பட்டு கிடந்த கிணறுகள் அமைந்த கக்கன்நகர் பகுதியானது பாளையங்கோட்டை போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியாகும்.

இதற்கிடையே கொலை நடந்த இடமானது பாளையங்கோட்டை மகராஜநகர் என்பதால், அது ஐகிரவுண்டு போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே முருகன் உள்ளிட்ட 3 பேர் கொலை தொடர்பாக, ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

Next Story