கீழ்த்தரமான அரசியல் செய்வதுடன் பெங்களூரு வன்முறையில் ஆதாயம் தேடும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் குமாரசாமி குற்றச்சாட்டு


கீழ்த்தரமான அரசியல் செய்வதுடன் பெங்களூரு வன்முறையில் ஆதாயம் தேடும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Aug 2020 3:30 AM IST (Updated: 22 Aug 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு கீழ்த்தரமான அரசியல் செய்வதுடன், அதில் காங்கிரசும், பா.ஜனதாவும் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். இந்த நிலையில், தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியில் நடந்த வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு அதில் அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிப்பதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

மேலும் வன்முறை சம்பவம் தொடர்பாக 2 கட்சிகளும் கீழ்த்தரமான அரசியல் செய்வதாகவும், அந்த கட்சிகளிடம் 10 கேள்விகள் கேட்டும் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜனதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “டி.ஜே.ஹள்ளி வன்முறை சம்பவத்தில் உள்துறை, உளவுப்பிரிவு மற்றும் அரசின் தோல்வியே காரணம். இந்த வன்முறைக்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வன்முறையை தடுக்க தவறிய உள்துறை மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மீது பா.ஜனதா அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?. வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று கூறும் பா.ஜனதா தலைவர்கள், காங்கிரசார் மீது விசாரணை அதிகாரிகளிடம் ஆதாரங்களை கொடுக்காமல் இருப்பது ஏன்?. தீ எரியும் வீட்டில் பா.ஜனதா அரசியல் செய்வது ஏன்?” என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை கேட்டுள்ளார்.

இதுபோன்று, காங்கிரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “டி.ஜே.ஹள்ளி மற்றும் பாதராயனபுராவில் நடந்த வன்முறையில் சிறுபான்மையினரை பாதுகாப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் நினைப்பது ஏன்?. குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது மங்களூருவில் நடந்த வன்முறையில் சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்காமல் காங்கிரஸ் எங்கு சென்றிருந்தது?. தற்போது டி.ஜே.ஹள்ளி வன்முறையில் எதிர்க்கட்சியாக இருந்து செயல்படாமல் அரசியல் செய்வதுடன், அதில் ஆதாயம் பெற துடிப்பது ஏன்?” என்பது உள்பட 10 கேள்விகளை குமாரசாமி கேட்டு இருக்கிறார்.

Next Story