இன்று சதுர்த்தி விழா: மணக்குள விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவிப்பு


இன்று சதுர்த்தி விழா: மணக்குள விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2020 7:00 AM IST (Updated: 22 Aug 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகருக்கு இன்று தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது, ஊர்வலம் நடத்தக்கூடாது என்பவை அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த உத்தரவுகளை கடுமையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியின்போது பக்தர்களுக்கு இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆனால் அரசு உத்தரவின் காரணமாக பிரசாதம் எதுவும் வழங்கப்படாது.

இதேபோல் முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 8 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் ஆகியன நடத்தப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் பூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள் வாங்குவதற்காக பெரிய மார்க்கெட்டிற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அதேபோல் நேரு வீதி, காந்தி வீதி, பாரதி வீதி, கொசக்கடை வீதியில் பல்வேறு விதமான களிமண் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பெண்கள் பலர் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி மல்லிகை பூ கிலோ ரூ.500 (பழைய விலை ரூ.150), சாமந்தி ரூ.300 (ரூ.120), சம்பங்கி ரூ.280 (ரூ.100), கோழிக்கொண்டை ரூ.70 (ரூ.30), கேந்தி ரூ.80 (ரூ.30), ரோஜா ரூ.250 (ரூ.100) என விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் விலைகளும் கணிசமாக உயர்ந்தது.

Next Story