கொரோனா தொற்று அதிகரித்ததால் பள்ளிப்பட்டு பஜார் தெரு தடுப்புகள் அமைத்து மூடல் வியாபாரிகள் எதிர்ப்பால் வாக்குவாதம்


கொரோனா தொற்று அதிகரித்ததால் பள்ளிப்பட்டு பஜார் தெரு தடுப்புகள் அமைத்து மூடல் வியாபாரிகள் எதிர்ப்பால் வாக்குவாதம்
x
தினத்தந்தி 22 Aug 2020 7:20 AM IST (Updated: 22 Aug 2020 7:20 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பஜார் தெரு தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பள்ளிப்பட்டு பஜார் தெருவில் உள்ள மளிகை கடை மற்றும் வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிப்பட்டு பேரூராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை பஜார் தெருவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைத்து மூடினர்.

இதற்கு பஜார் தெருவில் உள்ள வியாபாரிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்க வருவார்கள். இவ்வாறு தடுப்புகள் அமைப்பதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்லும் அளவிற்கு இடைவெளி விட்டு தடுப்பு அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பேரூராட்சி ஊழியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தடுப்புகள் அமைப்பதை வியாபாரிகள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிப்பட்டு தாசில்தார் செல்வகுமார், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அதிகாரிகள் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை இருப்பதாக தங்களுக்கு தகவல் வந்ததால் தடுப்புகள் அமைத்ததாக வியாபாரிகளிடம் தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் தாங்கள் பணி செய்வதை தடுக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகள் தடுப்புகளை அமைத்து விட்டு சென்றனர்.

Next Story