ரஷியாவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்கள் சென்னை வந்தது


ரஷியாவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்கள் சென்னை வந்தது
x
தினத்தந்தி 22 Aug 2020 7:35 AM IST (Updated: 22 Aug 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

ரஷியாவில் ஆற்றில் மூழ்கி பலியான தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேரின் உடல்கள் சென்னை வந்தது.

ஆலந்தூர்,

ரஷியாவின் வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வந்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லீபக், கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகியோர் கடந்த 8-ந்தேதி அங்குள்ள வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

பலியான மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

இந்தநிலையில் தமிழக மருத்துவ மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்துக்கு கொண்டுவர ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவண செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதையடுத்து 4 மாணவர்களின் உடல்கள் ரஷியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வரும் துருக்கீஸ் ஏர்லைன்ஸ் கார்கோ விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு மாணவர்களின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் கார்கோ அலுவலகத்துக்கு 4 மாணவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் தமிழர் நல ஆணையரகத்தின் சார்பில் உடல்கள் பெறப்பட்டன. பின்னர் 4 பேரின் குடியுரிமை, சுங்க இலாகா, போலீஸ் துறை சோதனைகள் முடிக்கப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

மத்திய சுகாதார துறை சான்று வழங்க உரிய மருத்துவர்கள் இல்லாததால் சுமார் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. அனைத்து சான்றுகளும் வழங்கப்பட்ட பின்னர் 4 பேரின் உடல்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்பு ஒவ்வொரு உடலும் தனித்தனி ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு மாணவர்களின் வீடுகளுக்கு தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன், மாணவர்களின் உடல்களுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். அவருடன் பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story