பொது இடத்தில் வைக்க தடை எதிரொலி: விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு எடுத்து சென்ற இந்து அமைப்பினர்


பொது இடத்தில் வைக்க தடை எதிரொலி: விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு எடுத்து சென்ற இந்து அமைப்பினர்
x
தினத்தந்தி 22 Aug 2020 6:27 AM GMT (Updated: 22 Aug 2020 6:27 AM GMT)

பொது இடத்தில் வைத்து வழிபடுவதற்கு வாங்கிய விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

தேனி,

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பிரமாண்டமான வடிவங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களிலேயே தேக்கம் அடைந்துள்ளன. அதே நேரத்தில் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் தேனி அருகே சத்திரப்பட்டியில் வாங்கி வைத்திருந்த சிலைகளையும், இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் அன்னஞ்சி விலக்கு அருகே ஒரு தனியார் மில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளையும் தங்களின் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அதுபோல் சத்திரப்பட்டி, அன்னஞ்சி விலக்கு ஆகிய இடங்களில் தயாரித்து வைத்திருந்த விநாயகர் சிலைகளை வாங்கி, மோட்டார் சைக்கிள், கார், சரக்கு வேன் போன்ற வாகனங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். மேலும் தேனி பங்களாமேடு பகுதியில் சாலையோர கடைகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைப்பதை தடுக்க முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக சிலைகள் கரைக்கும் நீர்நிலைகளிலும் இன்று காலையில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story