கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் பறிமுதல் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் பறிமுதல் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2020 3:00 AM IST (Updated: 22 Aug 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவில்பட்டி,

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து ஒரு லாரியில் ஒரு அடி முதல் 3 அடி வரை உள்ள 9 விநாயகர் சிலைகளை கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் விநாயகர் சிலைகளை கொண்டு வந்த லாரியை மறித்து 9 சிலைகளை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிலைகள் கொண்டுவர பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர். ஆனால் அதிகாரிகள் தர மறுத்ததால், சிலைகளை தர வலியுறுத்தி தாலுகா அலுவலக வாயில் முன்பு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் தாலுகா அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு நடத்துங்கள். மாலையில் கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி கண்மாயில் கரைக்கும்படி தெரிவித்தார். பின்னர் விநாயகர் சிலைகளை இந்து முன்னணியினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அனைவருக்கும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Next Story