சேரன்மாதேவி அருகே பரிதாபம்: பழத்தில் மறைத்து வைத்த பட்டாசு வெடித்ததில் ஆடு சாவு


சேரன்மாதேவி அருகே பரிதாபம்: பழத்தில் மறைத்து வைத்த பட்டாசு வெடித்ததில் ஆடு சாவு
x
தினத்தந்தி 23 Aug 2020 3:45 AM IST (Updated: 23 Aug 2020 12:30 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே பழத்தில் மறைத்து வைத்த பட்டாசு வெடித்ததில் ஆடு பரிதாபமாக இறந்தது.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று தனது ஆடுகளை அங்குள்ள இடைஞ்சான்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது அங்கு கிடந்த பழத்தை ஒரு ஆடு தின்ன முயன்றது. அப்போது அந்த பழத்துக்குள் மறைத்து வைத்திருந்த பட்டாசு வெடியானது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த ஆட்டின் முகம் சிதறியதில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. உடனே மற்ற ஆடுகள் தலைதெறிக்க ஓடின.

இதுகுறித்து பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மற்றொரு விலங்கையும், வெடி வைத்து கொன்றதற்கான தடயங்கள் கிடைத்தன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “சேரன்மாதேவி அருகே உள்ள கொழுந்துமாமலையில் ஏராளமான மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அவைகள் குடிநீரை தேடி, இடைஞ்சான்குளத்துக்கு வருவது வழக்கம். அப்போது சிலர், பழத்துக்குள் வெடியை மறைத்து வைத்து, வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். எனவே இதுதொடர்பாக வனத்துறையினர், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story